தமிழகத்தில் அண்மைக்காலமாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆங்காங்கே களமிறங்கி மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில், அரசு அதிகாரிகளையும் தவெகவினர் என மக்கள் தவறாகப் புரிந்துகொள்ளும் விசித்திரமான போக்கு அதிகரித்துள்ளது. அப்படியொரு சுவாரசியமான மற்றும் அதிரடியான சம்பவம் தென்காசி மாவட்ட கடையநல்லூர் பகுதியில் அரங்கேறியுள்ளது. ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரடியாகச் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, கடையநல்லூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பொது சுகாதார வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அப்போது, அங்கிருந்த ஒப்பந்ததாரரிடம் சுகாதார வளாகத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்திக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக முழு போதையில் அங்கு வந்த நபர் ஒருவர், மாவட்ட ஆட்சியரை நோக்கி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பத் தொடங்கினார். பொதுக் கழிப்பறையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாகக் கூறி, “நான் பொதுமகன், உங்களிடம் கேட்பேன்; இதற்கு உங்களிடம் பதில் இருக்கா?” என ரகளையில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் அந்த நபர் திடீரென மாவட்ட ஆட்சியரை நேருக்கு நேர் பார்த்து, “நீங்க தவெக கட்சி நிர்வாகி தானே?” என்று கேட்க, அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே பதறிய சுற்றியிருந்தவர்கள், “யோவ்.. அவர் மாவட்ட கலெக்டர்யா!” என்று எச்சரித்ததும், அந்த நபர் சட்டென்று சுதாரித்துக் கொண்டு “ஆமா, நீங்க கலெக்டர் தான்” என்று மழுப்பலாகக் கூறி அங்கேயே நின்றார். தொடர்ந்து தன்னை வீடியோ எடுப்பது குறித்து போதையில் புலம்பிக் கொண்டிருந்த அந்த வாலிபரை, அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
