நாளை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. பனையூரில் அமைந்துள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தவெக ஆட்சியமைத்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதலாவது பட்ஜெட் இது என்பதால், சட்டமன்றக் கூட்டத்தொடரை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
சட்டமன்றத்தில் கட்சியின் சார்பில் எந்தெந்த முக்கியப் பிரச்சினைகளை முன்னெடுத்துப் பேசுவது, கூட்டத்தொடரை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து எம்.எல்.ஏ-க்களுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படுமா என்பது போன்ற பலவிதமான கேள்விகளும் எதிர்பார்ப்புகளும் பொதுமக்கள் மத்தியில் நிலவி வரும் சூழலில், நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
