அரசியல் களத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரச்சாரம் நிறைவடையும் தருவாயில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாகச் சாடி வருகின்றனர். மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமனை ஆதரித்துப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தையும் அதன் தலைவர் விஜயையும் “கோமாளி கூட்டம்” என்று மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக செய்த மிகப்பெரிய தவறு தவெகவை ஒரு பொருட்டாக மதிக்காமல் விட்டதுதான் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், தவெக அலை வீசியது உண்மை என்றால் அவர்களுக்கு பெருவாரியான இடங்கள் கிடைத்திருக்க வேண்டும் என்றும், தவெகவை ஒரு கொள்கை எதிரியாகக் கருதாமல் விட்டதே ஆட்சி வாய்ப்பை இழந்ததற்குக் காரணம் என்றும் ஆவேசமாகத் தெரிவித்தார். இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு தவெகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. கொளத்தூர் தொகுதியில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர், மக்கள் ஆதரவு பெற்ற தலைவரையும் தமிழக மக்களையும் பார்த்து “கோமாளி கூட்டம்” என்று கொக்கரிப்பது ஏமாற்றத்தின் வெளிப்பாடே என்று தவெக விமர்சித்துள்ளது. மேலும், சீனியர் கோமாளியாக இருப்பவர், தன் கூடவே ஒரு ஜூனியர் கோமாளியையும் வளர்த்துவிட்டு, ஆபாசமும் அவதூறும் நிறைந்த அரசியலைத் தமிழ்நாடு முழுக்க பரப்பி வருகிறார் என்றும் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.
வெற்று விளம்பர மாடல் ஆட்சி நடத்தி மக்களை ஏமாற்றி வந்த இக்கூட்டத்தை, மீண்டும் ஆட்சி அதிகாரத்தின் எல்லைக்குக்கூட வரவிடாமல் மக்கள் துரத்திய விரக்தியிலேயே இதுபோன்ற கோமாளிக் கூத்துகளை அரங்கேற்றி வருகின்றனர் என்றும் தவெக சாடியுள்ளது. இனி எத்தனை குட்டிக்கரணங்கள் போட்டாலும், திமுகவும் அவர்களின் செயல்களை ஆதரித்து வருபவர்களும் தமிழக மக்களால் நிரந்தரமாக நிராகரிக்கப்படுவது உறுதி எனத் தமிழக வெற்றிக் கழகம் தனது அறிக்கையில் அழுத்தமாகத் தெரிவித்துள்ளது.
