சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வந்த திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மிகப்பெரிய வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் புதிய ஆட்சியை அமைத்துள்ள நிலையில், மாநில அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப் பெற்றுள்ளது. புதிய அரசு பல புதிய நலத்திட்டங்களை அறிவித்து வரும் அதே வேளையில், முந்தைய ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டு நிலுவையில் இருந்த பல முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்ட்டும், சில திட்டங்கள் ரத்து செய்யப்பட்டும் வருகின்றன.
முந்தைய திமுக ஆட்சியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பரந்தூர் பசுமை பரப்பளவு விமான நிலையத் திட்டம் மற்றும் அதனை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்ட 53 கி.மீ நீள பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ ரயில் பாதை ஆகிய இரண்டும் தவெக அரசால் அதிகாரப்பூர்வமாக கைவிடப்பட்டுள்ளன. மக்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் நில எடுப்பு சார்ந்த விவகாரங்களைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் ரத்து செய்யப்பட்டதாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதேபோல, சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட திருவான்மியூர் – உத்தண்டி இ.சி.ஆர் உயர்மட்டச் சாலைத் திட்டமும், கிண்டி – வேளச்சேரி மேம்பாலத் திட்டமும் நிறுத்தப்பட்டு, அவற்றின் டெண்டர்கள் நிதிப் பற்றாக்குறை மற்றும் நிர்வாகக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நகர்ப்புற மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த திட்டங்களிலும் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டு அறிவிக்கப்பட்ட புதிய நகர மேம்பாட்டுத் திட்டமும், செம்மஞ்சேரியில் ரூ.261 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டப்பட்ட பல்நோக்கு விளையாட்டு வளாகத் திட்டமும் தவெக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், செம்மஞ்சேரி நிலத்தில் சர்வதேச மற்றும் ஒலிம்பிக் தரத்திலான புதிய மேம்படுத்தப்பட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என்று அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கோவையில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டு திறப்பு விழா நிலைக்கு வந்த தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் திறக்கப்படாமல் தாமதமாகி வருவது அரசியல் தளத்தில் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இது குறித்து விளக்கியுள்ள அரசு நிர்வாகம், திட்டப் பணிகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படவில்லை என்றும், தொழில்நுட்ப ஆய்வுகள் முடிவடைந்தவுடன் விரைவில் அந்த மையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.
