தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் மரிய வில்சன் இதனைத் தாக்கல் செய்யவுள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் நடத்தப்பட்ட பலக்கட்ட ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த வரவு செலவுத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை, பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான நிதியுதவி மற்றும் இலவச எரிவாயு உருளைகள் போன்ற முக்கிய வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்புகள் இதில் இடம்பெறலாம் எனப் பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
நிதிநிலை அறிக்கையைத் திறம்பட வாசிப்பதற்காக நிதி மற்றும் வேளாண் அமைச்சர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. இன்று பொது பட்ஜெட்டும், நாளைய தினம் விவசாயத்திற்கான தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன. இதனிடையே, மேகதாது அணைப் பிரச்சனை, காவிரி நீர் விவகாரம், மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை போன்ற பல்வேறு உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளை முன்வைத்து, பேரவையில் கடும் விவாதங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றன.
