அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறார். அண்மையில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அவர் விதித்த இறக்குமதி வரியை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தலையிட்டுக் குறைத்தது. அதேபோல், ஈரான் மீது தொடுத்த போரினால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு உலகமே தவித்த நிலையில், தற்போது ஒருவழியாக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி அந்தப் பிரச்சனை ஓய்ந்துள்ளது. ஆனால், இந்த அரசியல் அதிரடிகளுக்கு இடையே, டிரம்புக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு சொகுசு வைர மோதிரம் இப்போது அவருக்குப் புதிய தலைவலியைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பிரபல வைர நிறுவனம் ஒன்று, கைக்கடிகாரத்தின் அளவிற்குப் பெரிய, அசுர அளவிலான தங்க மோதிரம் ஒன்றை அதிபர் டிரம்புக்குச் சமீபத்தில் பரிசாக வழங்கியுள்ளது. உலக வைர மையத்தின் தலைவரான இசிடோர் மோர்செல், பெல்ஜியத்திற்கான அமெரிக்க தூதரிடம் இந்த மோதிரத்தை ஒப்படைத்துள்ளார். தங்கம் மட்டுமன்றி, இதில் 300-க்கும் மேற்பட்ட உயர்தர வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 33 லட்சம் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
பார்க்கவே பிரமிப்பூட்டும் இந்த மோதிரம்தான் தற்போது டிரம்புக்குச் சட்ட ரீதியான சிக்கலாக மாறியுள்ளது. அமெரிக்காவில் அதிபராக இருப்பவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தோ அல்லது தனிநபர்களிடமிருந்தோ இவ்வளவு பெரிய விலையுயர்ந்த பரிசுகளை நேரடியாக ஏற்றுக்கொள்வது வெள்ளை மாளிகையின் பாரம்பரிய மரபுகளுக்கும் விதிகளுக்கும் எதிரானது. இதனைச் சுட்டிக்காட்டி அங்குள்ள எதிர்க்கட்சியினர், டிரம்ப் விதியை மீறிவிட்டார் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால், “கைக்கு எட்டிய மோதிரம் விரலுக்கு எட்டாமல்” டிரம்ப் அதைத் திருப்பித் தர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார், இது நம்ம ஊர் பாணியில் சொல்லப்போனால் ‘வடை போச்சே’ என்ற கதையாக மாறியுள்ளது.
