தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகின்றது.
இப்படியான நிலையில் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகைக்கு விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விதிமுறைகளில் தமிழ்நாடு அரசு மேலும் சில தளர்வுகளை வழங்கி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அரசு துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று தற்போது ஓய்வூதியம் பெறுவோர் குடும்பங்களை சேர்ந்த ஓய்வூதியதாரர் அல்லாத பெண்களும் விண்ணப்பிக்கலாம். அரசு துறையில் மானியம் பெற்று 4 சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களை சேர்ந்த பெண்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
