உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறவிருக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக, வேங்கிக்கால் பகுதியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவிலும், அதைத் தொடர்ந்து அரசு சார்பில் முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்துப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்விலும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கோயிலின் மூன்றாம் பிரகாரம் வரை சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம் என்ற நிலையில், இம்முறை ராஜகோபுரத்திற்கு வெளியிலேயே செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கடந்த ஆட்சிக்காலங்களில் கூட பத்திரிகையாளர்களின் செய்தி சேகரிப்புக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தப்படாத நிலையில், தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து அங்கு நின்ற செய்தியாளர்கள் கடும் வேதனையும் அதிருப்தியும் தெரிவித்தனர்.
பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட அதே வேளையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் தொப்பி (குல்லா) அணிந்த நபர் ஒருவர் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டார். இதைக் கண்ட செய்தியாளர்களும் பொதுமக்களும், “பத்திரிகையாளர்களுக்கு ஒரு விதியா? மற்றவர்களுக்கு வேறு விதியா?” எனக் கேள்வி எழுப்பி, அமைச்சர் ரமேஷிடம் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணையில், கோயிலுக்குள் தொப்பி அணிந்து சென்றவர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உதவியாளர் என்பதும், அவர் மாற்று மதத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. திருக்கோயில் வளாகத்திற்குள் தொப்பி அணிந்து ஆய்வில் பங்கேற்றதற்கு அங்கிருந்த சிலர் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த உதவியாளர் உடனடியாகத் தொப்பியைக் கழற்றிவிட்டு ஆய்வில் தொடர்ந்து பங்கேற்றார். இச்சம்பவம் கோயிலில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
