தில்லானா மோகனாம்பாள் கதைக்கு இப்படி ஒரு டிமாண்ட் இருந்ததா? நாவலாசிரியருக்குக் கிடைத்த மிகப்பெரிய தொகை..

By vinoth

Updated on:

சிவாஜி கணேசனின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படங்களில் ஒன்று தில்லானா மோகனாம்பாள். அதே பெயரில் வெளியான நாவலை தழுவி இந்த படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குனர் ஏ பி நாகராஜன். இந்த படம் உருவானக் கதையே மிகவும் சுவாரஸ்யமான ஒன்று.

நாவல் ஆசிரியர் கொத்தமங்கலம் சுப்பு 1957 – 58 இல் ஆனந்த விகடனில் தில்லானா மோகனாம்பாள் கதையை எழுதினார். வாராவாராம் வரும் தொடர்கதை. கதைக்களம் தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் அதிகமாக வாழ்ந்து வந்த  தேவரடியார் பெண்களின் வாழ்க்கையும் இசைக் கலைஞர்களின் வாழ்க்கையையும் உள்ளடக்கியதாக இருந்தது.

   

இந்த தொடருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியால் அதனை படமாக்க ஆனந்த விகடன் நிறுவனரும் ஜெமினி ஸ்டுயோஸ் அதிபருமான எஸ்எஸ் வாசன் விரும்பினார். அதற்காக கதை உரிமையை எழுத்தாளரிடம் இருந்து பெற்று வைத்திருந்தார். இதே நாவலை படமாக்க இயக்குனர் ஏ.பி.நாகராஜன் விரும்பி கதை உரிமை கேட்ட போது அவர் வாசன் தர மறுத்துவிட்டார். ஆனால் ஏனோ அவராலும் அந்த படத்தை உருவாக்க முடியவில்லை.

இதனால் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஏ பி நாகராஜன் அந்தக் கதை உரிமையைக் கேட்ட போது அதைக் கொடுக்க எஸ் எஸ் வாசன் சம்மதித்துள்ளார். ஆனால் கதை உரிமைக்காக 25 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். அப்போது ஒரு கதைக்கு 25 ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. ஆனாலும் தயங்காமல் அதைக் கொடுத்துள்ளார் ஏ பி நாகராஜன். ஆனால் அவர் அதோடு நிற்கவில்லை.

அந்த நாவலை எழுதிய கொத்தமங்கலம் சுப்புவை சந்தித்து அவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் அதை வாங்க மறுத்த கொத்தமங்கலம் சுப்பு “உங்களிடம் வாங்கிய 25 ஆயிரம் ரூபாயையும் வாசன் அவர்கள் என்னிடமே கொடுத்து விட்டார். அதனால் எனக்கு உங்கள் பணம் வேண்டாம் எனக் கூறியுளார். அதன் பிறகு தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் உருவாகி 5 மொழிகளில் டப் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆனது. படம் பல திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடியது. சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதையும், சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதையும் பெற்றது.