மரண பயத்திலும் தாய்ப்பாசம் வென்றது…! நிலநடுக்கத்தில் சிதைந்த கட்டிடம்… தன் உயிரைக் கொடுத்து 1 வயது மகளை மீட்ட தாய்…!!

By Swetha on ஆனி 28, 2026

Spread the love

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அண்மையில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஒட்டுமொத்த நாட்டையும் நிலைகுலையச் செய்துள்ளன. இந்த இயற்கைச் சீற்றத்தினால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், மீட்புப் பணிகளின் போது கண்டெடுக்கப்பட்ட ஒரு தாயின் பாசம் மற்றும் தியாகக் கதை ஒட்டுமொத்த உலகையும் உருகவைத்துள்ளது.

வெனிசுலாவின் இரண்டாம் டிவிஷன் கால்பந்து கிளப்பான ‘மாரிடிமோ டி லா குவைரா’ அணியைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் ஹெக்டர் பெல்லோ. இந்த நிலநடுக்கத்தின் போது இவரது வீடு இருந்த கட்டிடமும் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் இருந்த இவரது மனைவி ஆண்ட்ரியா பெல்லோ, கட்டிடம் இடிந்து தம்மீது விழுவதைக் கண்டு, தனது ஒரு வயதுப் பெண் குழந்தையான அலானாவை தன் உடலால் அரணாக மூடிப் பாதுகாத்துள்ளார். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய ஆண்ட்ரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால், தாயின் உடலுக்குள் பத்திரமாக இருந்த அந்தப் பிஞ்சு குழந்தை எவ்வித ஆபத்துமின்றி உயிரோடு மீட்கப்பட்டது.

   

தனது மனைவியின் மறைவைத் தொடர்ந்து, கால்பந்து வீரர் ஹெக்டர் பெல்லோ தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “எங்கள் குழந்தையைக் காப்பாற்ற நீ உனது உயிரையே தியாகம் செய்துவிட்டாய் என்பதை அவளுக்கு நான் எப்படிப் புரியவைப்பேன்? நீதான் எங்களின் எக்காலத்திற்குமான சிறந்த கதாநாயகி ” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவளது கடைசி மூச்சு இருக்கும் வரை குழந்தையைக் கைவிடாமல் எப்படிக் காப்பாற்றினாள் என்ற வீரக் கதையைத் தனது மகள் வளர்ந்த பிறகு அவளிடம் நிச்சயம் கூறப்போவதாகவும் அவர் சோகத்துடன் பதிவிட்டுள்ளார். இந்தத் தாயின் இறுதித் தியாகம் வெனிசுலா மக்கள் மற்றும் விளையாட்டு உலகினரிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.