மீண்டும் சர்ச்சை…! “ஆட்சி திருப்திகரமாக இருந்தால் எண் ஒன்றை அழுத்தவும்” சர்வே கால் தொந்தரவால் சிரமத்தில் மக்கள்…. போலீஸ் விசாரணை…!!

By Devi Ramu on மார்கழி 19, 2025

Spread the love

புதுச்சேரி மாநிலத்தில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ‘சர்வே’ என்ற பெயரில் பொதுமக்களுக்கு வரும் தொடர் தொலைபேசி அழைப்புகள் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளன. சில வாரங்களுக்கு முன்பு ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பவரைப் பற்றித் தொடங்கி, தற்போது முதல்வர் ரங்கசாமியின் செயல்பாடுகள் குறித்துக் கருத்து கேட்கும் வகையில் இந்தப் பதிவு செய்யப்பட்ட குரல் அழைப்புகள் வருகின்றன.

முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி திருப்திகரமாக இருந்தால் ‘எண் ஒன்றை அழுத்தவும்’ எனத் தொல்லை செய்யும் இந்த அழைப்புகளால் நிம்மதி இழந்துள்ள மக்கள், சைபர் க்ரைம் காவல்துறையில் இது குறித்துப் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியோ அல்லது மற்ற அரசியல் அமைப்புகளோ தாங்கள் இது போன்ற சர்வேக்களை நடத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளன.

   

மக்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் திருடப்பட்டு இத்தகைய அரசியல் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சைபர் க்ரைம் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், தேர்தல் நேரத்தில் அறிமுகமாகும் புதிய அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளால் புதுச்சேரி மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.