‘என் கதையை திருடி எடுத்திருக்காங்க, தனுஷ் என்கிட்ட புள்ளை மாதிரி பழகுவாரு’.. கேப்டன் மில்லர் கதை திருட்டு குறித்து ஆவேசப்பட்டு பேசிய வேல ராமமூர்த்தி..

By Sumathi

Updated on:

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான படம் கேப்டன் மில்லர். பொங்கல் பண்டிகை ரிலீஸான இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார். பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்த இந்த படம், ஆங்கிலேயர் காலத்தில் நடக்கும் ஒரு போராட்ட கதை.

இந்த படம் முழுக்க வன்முறை நிறைந்த சண்டை காட்சிகளும், துப்பாக்கி சுடும் காட்சிகளுமே இருப்பதாக, ரசிகர்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனம் எழுந்து வருகிறது. எனினும் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் கதை, எழுத்தாளர் மற்றும் நடிகர் வேல ராமமூர்த்தி எழுதிய பட்டத்து யானை என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

   

இதுகுறித்து ஒரு நேர்காணலில் நடிகர் வேல ராமமூர்த்தி கூறியதாவது, குற்றப் பரம்பரை, அரியநாச்சி, பட்டத்து யானை, குருதி ஆட்டம் என பல நாவல்களை எழுதி இருக்கிறேன். நல்ல படைப்புகளாக அதை வாசகர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பட்டத்து யானை நாவலின் கதையை திருடி, கேப்டன் மில்லர் படம் உருவாக்கப்பட்டதாக வாசகர்களே கூறியிருக்கின்றனர். இன்னும் நான் படம் பார்க்கவில்லை. அதனால் நான் இந்த புகாரை கூறவில்லை.

ஆனால் எனது நாவலை ஒப்பிட்டும், கேப்டன் மில்லர் கதையை ஒப்பிட்டும் ஒரு வாசகர் யூடியூப்பில் பேசி இருக்கிறார். அந்த வகையில் சின்ன சின்ன மாற்றங்களுடன் ஏறத்தாழ என் கதைதான் கேப்டன் மில்லர் படமாக இருக்கிறது. இப்படி கதையை திருடி எடுப்பவர்கள் கதைக்களத்தின் இடங்கள், கேரக்டர்களின் பெயர்கள், கதை நடக்கும் காலகட்டம் போன்றவற்றை மாற்றி எடுத்துவிடுவர். ஆனால் எப்படியிருப்பினும் என்னுடைய கதை என்று தெரிய வந்திருக்கிறது.

நான் 40 ஆண்டுகளாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். 10 ஆண்டுகளாக சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம். அனுமதி வாங்கியிருக்கலாம். இந்த படத்தின் நாயகன் தனுஷ் என்னிடம் பிள்ளை போல அன்பாக பழகுபவர். அவருக்கு இது தெரிந்திக்க வாய்ப்பில்லை. தயாரிப்பாளருக்கும் தெரிந்திருக்காது. கதை சொன்னவர்கள்தான் என் கதையை ஏமாற்றி கூறியிருக்கின்றனர்.

இதுகுறித்து திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்யராஜிடம் புகார் கொடுக்க இருக்கிறேன். ஏனெனில் 2023 ஜனவரி மாதமே இந்த நாவலின் கதையை நான் ஸ்கிரிப்ட் ஆக அங்கு பதிவு செய்து வைத்திருக்கிறேன். பட்டத்து யானை மட்டுமல்ல, என்னுடைய பல சிறுகதைகள், நாவல்களில் இருந்து காட்சிகள் என பல திருடப்பட்டு, படங்கள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன, என்று வேதனையாக தெரிவித்திருக்கிறார் நடிகர் வேல ராமமூர்த்தி.

author avatar
Sumathi