சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில்முனைவோர் மிஸா நசிலி, தான் பார்த்த தனியார் வேலையிலிருந்து நீக்கப்பட்ட பிறகு சொந்தமாகத் தொழில் தொடங்கினார். ஆனால், ஆரம்பத்தில் சந்தித்த கடுமையான நஷ்டங்களால் தொழில்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. ஒருகட்டத்தில் வங்கிக் கணக்கில் வெறும் 20 சிங்கப்பூர் டாலர் மட்டுமே மீதம் இருக்க, மற்றொருபுறம் 80,000 சிங்கப்பூர் டாலர் கடன் சுமையில் சிக்கித் தவித்தார். பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தியவர் என்ற ஏமாற்றம் பெற்றோருக்கு இருந்தபோதிலும், அவர் மனம் தளராமல் தொடர்ந்து போராடினார்.
கடும் நிதி நெருக்கடியால் பொருட்களைக் கொண்டு செல்ல வண்டிக்குக்கூடப் பணம் இல்லாத நிலையில், மிஸா நசிலியே நேரில் பொருட்களைச் சுமந்து சென்று விநியோகித்தார். பெரிய ரீடெய்ல் நிறுவனங்கள் ஆரம்பத்தில் அவரது பொருட்களை நிராகரித்தாலும், தனது தொடர் முயற்சியால் மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். படிப்படியாக வளர்ந்த இவரது பொருட்கள், இன்று சிங்கப்பூர் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பிரபல கடைகளில் விற்பனையாகி வருகின்றன.
இன்று ஐந்து நிறுவனங்களை நடத்தி வரும் சிஇஓ-வாக உயர்ந்துள்ள மிஸா நசிலியின் நிறுவனங்கள், இந்த ஆண்டில் மட்டும் 1.5 கோடி சிங்கப்பூர் டாலருக்கும் மேல் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளன. புதிய போர்ஷே கார், ஆறு மாடித் தலைமை அலுவலகக் கட்டிடம் என பிரம்மாண்ட நிலையை அடைந்துள்ள அவர், “வெளியில் தெரியும் வெற்றியை மட்டும் பார்த்து உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்; ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் ஆயிரம் தோல்விகளும் தியாகங்களும் இருக்கும்” என்று இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை அளித்துள்ளார்.
