ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், சொத்து மற்றும் காதலுக்காக வளர்ப்புத் தாயையே 17 வயது மகள் தனது காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஞ்சியின் மணிடோலா பகுதியைச் சேர்ந்த நஹிதா பர்வீன், மின்வாரியத்தில் பணியாற்றி மறைந்த தனது கணவரின் இழப்பீட்டுத் தொகையான 45 லட்ச ரூபாயை வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். ஆனால், அவரது 17 வயது வளர்ப்பு மகள், தனது 20 வயது காதலனான அர்பாஸிற்குத் தொடர்ந்து தாயின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்து கொடுத்து வந்துள்ளார். இதனைப் பர்வீன் கண்டித்ததே இந்த கொடூரக் கொலைக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்துள்ளது.
தாயின் கண்டிப்பால் ஆத்திரமடைந்த அந்த இளம் ஜோடி, தங்களது சொகுசு வாழ்க்கைக்கும் காதலுக்கும் பர்வீன் தடையாக இருப்பதாகக் கருதி அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டது. தாயைக் கொன்றுவிட்டால் 45 லட்ச ரூபாய் பணம், சொத்துக்கள் மற்றும் தந்தையின் மரணத்திற்குப் பிறகு கருணை அடிப்படையில் கிடைக்கும் அரசு வேலை என அனைத்தையும் கைப்பற்றிவிடலாம் என அவர்கள் கணக்குப் போட்டுள்ளனர். இதற்காகத் தனது காதலன் மற்றும் அவனது மூன்று நண்பர்களுக்கு 12 லட்சம் ரூபாய் தருவதாக அந்தச் சிறுமி ஒப்பந்தம் செய்து, கடந்த ஏப்ரல் 24-ம் தேதி நள்ளிரவில் கொலையை அரங்கேற்றியுள்ளார்.
திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை இரவு பர்வீன் தூங்கிக் கொண்டிருந்தபோது, காதலன் மற்றும் அவனது நண்பர்கள் உதவியுடன் சிறுமி தாக்குதலைத் தொடங்கியுள்ளார். ஒருவர் பர்வீனின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்த, மற்றவர்கள் கைகால்களை இறுக்கிப் பிடித்துள்ளனர். பர்வீன் உயிருக்குப் போராடியபோது அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தப்போக்கினால் உயிர் பிரிந்தது. பின்னர் எவ்வித சலனமும் இன்றி சடலத்தை ஃப்ரீசர் பாக்ஸில் வைத்துவிட்டு, மறுநாள் காலை தாய் குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக உறவினர்களுக்குத் தகவல் கொடுத்து, ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்குகளையும் முடித்துள்ளனர்.
இருப்பினும், இறுதிச் சடங்கின் போது பர்வீனின் கழுத்தில் இருந்த காயத்தைப் பார்த்த மைத்துனருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சிறுமியைப் பிடித்து விசாரித்தபோது, சொத்துக்காகத் தாயைக் கொன்ற உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, பீகாரில் தலைமறைவாக இருந்த காதலன் அர்பாஸ் உள்ளிட்ட இருவரைப் போலீஸார் கைது செய்தனர். புதைக்கப்பட்ட பர்வீனின் உடல் இரண்டு நாட்களுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
