2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய், திமுக கூட்டணியில் இருந்த விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ எனப் பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். இதனைப் பயன்படுத்தி தவெக-வுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது ஆதரவாளர்களான பிரவீன் சக்கரவர்த்தி, ஜோதிமணி உள்ளிட்டோர் பெரிதும் விரும்பினர். எனினும், ப.சிதம்பரம் மற்றும் செல்வப்பெருந்தகை போன்ற மாநிலத் தலைவர்களின் எச்சரிக்கையால் காங்கிரஸ் திமுக கூட்டணியிலேயே நீடித்து, 28 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 5 இடங்களை மட்டுமே பெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக வெற்றி பெற்ற அன்றே, காங்கிரஸ் தவெக ஆதரவு நிலைப்பாட்டிற்கு மாறி மறுநாளே முதல் ஆளாக ஆதரவு அளித்தது திமுகவிற்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம், விசிக தலைவர் திருமாவளவனுக்கும் தவெக-வுடன் கூட்டணி வைக்க அக்கட்சியினரிடமிருந்து பலத்த அழுத்தம் வந்தது. தேர்தல் முடிவில் தொங்கு சட்டசபை அமையும் என்பதைக் கணித்த திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக விரும்பினார். ஆனால், அவரது இந்த முடிவை திமுக தலைமை ரசிக்காததால், கடைசி நேரத்தில் அவர் போட்டியிடும் முடிவைக் கைவிட்டார். ஒருவேளை அவர் திட்டமிட்டபடி போட்டியிட்டிருந்தால் இந்நேரம் அமைச்சராகியிருக்கக் கூடும் என்றும், தற்போதைய சூழலில் அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சரவையில் இடம்பிடிக்க முதல்வர் விஜய் சம்மதிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தவெக-விற்குப் பிரம்மாண்டமான ஆதரவு அலை இருப்பதும், தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதும் தேர்தலுக்கு முன்பே ராகுல் காந்தி மற்றும் திருமாவளவன் ஆகியோருக்குத் தெரிந்திருந்த நிலையில், உளவுத்துறையையும் வியூக வகுப்பாளர்களையும் கையில் வைத்திருந்த திமுகவிற்கு இது எப்படித் தெரியாமல் போனது என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தங்கியிருந்த கொளத்தூர் தொகுதியிலேயே தோற்கும் அளவிற்கு நிலைமை கைமீறிப் போனது எப்படி என்று திமுக ஆதரவாளர்களே தற்போது சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். கள நிலவரத்தை ஸ்டாலினிடம் சொல்ல அவரைச் சுற்றியிருந்த மேலிட நிர்வாகிகள் பயந்தார்களா அல்லது அவர்களுக்கே உண்மை தெரியவில்லையா என்ற விவாதமும் எழுந்துள்ளது.
விஜய் தனியாகப் போட்டியிடுவது திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து, திமுகவிற்குப் சாதகமாக அமையும் என்றும், அதிமுக காணாமல் போகும் என்றும் ஸ்டாலினை நம்ப வைத்தது யார் என திமுகவினர் ஆவேசமடைந்துள்ளனர். ஏனெனில், இந்தத் தேர்தலில் கடந்த முறையை விட அதிமுக ஓரளவிற்குத் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், திமுக தான் தனது கோட்டையான சென்னையின் 16 இடங்களில் 14 இடங்களை தவெக-விடம் பறிகொடுத்துப் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. தவெக மொத்தமாக திமுகவின் வாக்கு வங்கியைத்தான் கைப்பற்றியுள்ளது என்ற கசப்பான உண்மையை உணராமல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களால் தான் தோற்றோம் என்று திமுகவினர் கூறுவது ஏற்க முடியாத தியரி என உடன்பிறப்புகளே அதிர்ச்சியுடன் விவரித்து வருகின்றனர்.
