தற்போது இந்திய சமூக வலைதளங்களில் ‘டாக் ஆப் தி டவுன்’ ஆக உருவெடுத்துள்ளது ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (CJP – Cockroach Janta Party). உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் சமீபத்தில் போலி சான்று தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, “வேலையில்லாத சில இளைஞர்கள் கரப்பான்பூச்சி, ஓட்டுண்ணிகளைப் போல் சமூக ஊடகங்கள் மூலமாக ஊடகவியலாளர்கள் போலத் தங்களைக் காட்டிக்கொண்டு அனைவரையும் தாக்கிப் பேசி வருகின்றனர்” என்று கருத்து தெரிவித்தார். இதற்கு இளைஞர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்தத் திட்டவட்டமான விமர்சனத்தை மையமாக வைத்தே கடந்த மே 16-ஆம் தேதி இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (X) தளங்களில் இக்கட்சிப் பக்கம் தொடங்கப்பட்டது.
மதச்சார்பற்ற, சோசியலிச, ஜனநாயக மற்றும் ‘சோம்பேறி’ என்ற வித்தியாசமான கொள்கைகளோடு, வேலையில்லாதவர்கள் மற்றும் சோம்பேறிகளின் குரலாக இக்கட்சி தங்களை அறிவித்துக் கொண்டது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, நாட்டின் வேலைவாய்ப்பின்மை போன்ற இளைஞர்களின் முக்கியப் பிரச்சினைகளை மீம்கள் மற்றும் அனிமேஷன் வடிவில் நகைச்சுவையாகவும் ஆழமாகவும் இப்பக்கம் அனல் பறக்கப் பதிவிட்டது. இதனால் குறுகிய காலத்திலேயே ஆளும் பாஜகவின் சமூக வலைதளப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை முந்தி, இன்ஸ்டாகிராமில் 19 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ்களைப் பெற்று இந்திய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் இப்பக்கத்தைப் பின்தொடரத் தொடங்கினர்.
மில்லியன் டாலர் கேள்வியாக இருந்த இந்த வினோதக் கட்சியின் பின்னணியை ஆராய்ந்தபோது, இதன் நிறுவனர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த அபிஜித் திப்கே என்பது தெரியவந்தது. புனேவில் இதழியல் படிப்பை முடித்துவிட்டு, தற்போது அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு (Public Relations) துறையில் முதுகலை படித்து வரும் இவர், 2020 முதல் 2023 வரை ஆம் ஆத்மி கட்சியின் சமூக வலைதளப் பிரிவில் தீவிர தன்னார்வலராகச் செயல்பட்டவர் ஆவார். குறிப்பாக 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் டிஜிட்டல் பிரச்சார உத்திகளிலும், மீம் அடிப்படையிலான அரசியல் ட்ரெண்ட்களிலும் மிக முக்கியப் பங்காற்றிய அனுபவம் கொண்டவர்.
அமெரிக்காவில் இருந்துகொண்டு அபிஜித் திப்கே இந்திய இளைஞர்களை சமூக வலைதளங்கள் மூலம் மிக வேகமாக ஒருங்கிணைத்தது, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே பலத்த சந்தேகத்தையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியது. ஏனெனில், சமீப காலங்களில் இலங்கை, வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் சமூக வலைதளங்கள் மூலமாகவே இளைஞர்கள் பெருமளவில் திரட்டப்பட்டு, வன்முறை வெடித்து ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டன. அதுபோன்றதொரு சூழல் இந்தியாவிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே, தற்போது ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’யின் சமூக வலைதளப் பக்கங்கள் இந்தியாவில் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளன.
