கோட்டைக்குள் நுழையும் மாஸ் கூட்டணி.. ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டிக்கு விஜய் கொடுத்த பவர்ஃபுல் பதவி.. அதிரும் தமிழக அரசியல்…!!

By Muthu Mani on வைகாசி 22, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் கடந்தும், மாநில அரசியல் களம் வியக்கத்தக்க திருப்பங்களுடன் தொடர்ந்து பரபரப்பாகவே இயங்கி வருகிறது. ஆட்சியைத் தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட திமுக பலத்த சரிவைச் சந்தித்து எதிர்க்கட்சியாக மாறியுள்ளதுடன், அதன் வலுவான கூட்டணியும் முற்றிலுமாக உடைந்துள்ளது. புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைப் பிடித்து, அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். தவெக அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் நேரடியாகப் பங்கேற்றுள்ள நிலையில், கம்யூனிஸ்ட்கள் வெளியிலிருந்து ஆதரவளித்து வருகின்றனர்; மதிமுகவும் விஜய்யின் செயல்பாடுகளைப் பாராட்டி வருகிறது. அதேநேரம், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றதாகக் கூறி, வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அவருக்கு எதிராக ‘தர்மயுத்தம் 2.0’ தொடங்கி புதிய பிளவை ஏற்படுத்தியுள்ளனர்.

தவெகவின் இந்த அதிரடி ஆட்சி மாற்றத்திற்குப் பின், சொல்லிக்கொள்ளும் படியாகப் புதிய திட்டங்கள் எதுவும் வராவிட்டாலும், அடுத்தடுத்து எழும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாமல் நகர்கிறது புதிய அரசு. குறிப்பாக, அரசுப் பதவியேற்பு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ முதலாவதாகவும், ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மூன்றாவதாகவும் பாடப்படுவது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதுமட்டுமன்றி, ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் பலரும் மக்கள் பணிகளை விடுத்து, சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ மோகத்தில் உலா வருவதும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக, முதலமைச்சரின் ஆஸ்தான ஜோதிடரான ராதன் பண்டிட்டை அரசு ஆலோசகராக நியமிக்க எடுத்த முடிவு, பலத்த கண்டனங்களால் வாபஸ் பெறப்பட்ட நிலையில், தற்போது புதிய ஆலோசகர்கள் நியமன விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

   

அதன்படி, தவெகவின் தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்ட ஜான் ஆரோக்கியசாமியை முதலமைச்சரின் அரசியல் பிரிவு ஆலோசகராகவும், விஜய்யின் நெருங்கிய நண்பரான விஷ்ணு ரெட்டியைப் பொது விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் நியமிக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. ஏற்கனவே ஜோதிடர் நியமன விவகாரத்தில் அரசு பின்வாங்கிய நிலையில், இப்போது முதலமைச்சருக்கு மிகவும் நெருக்கமான, அரசியல் அதிகாரப்பூர்வமற்ற இருவருக்கு மிக முக்கிய அரசுப் பொறுப்புகள் வழங்கப்படவுள்ள தகவல், அரசியல் வட்டாரங்களில் புதிய புயலைக் கிளப்பியுள்ளதுடன், விஜய்யின் நிர்வாகத் திறமை மீதான விவாதங்களையும் மறுபடி தீவிரப்படுத்தியுள்ளது.