கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 19 வயது நர்சிங் மாணவி சுஷ்மிதா, தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி பிரவின்ராஜ் என்ற இளைஞரை தீவிரமாக காதலித்து கடந்த அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், சமீபத்தில் இவர்களது குடும்பத்தினரிடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி நள்ளிரவில் திடீரென காணாமல் போன சுஷ்மிதா, வீட்டின் பின்புறம் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சுஷ்மிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகாரளித்ததைத் தொடர்ந்து, கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசையாகக் காதலித்து மணமுடிந்த இரண்டே மாதங்களில், ஒரு இளம் பெண்ணின் நர்ஸ் கனவும் இல்வாழ்க்கையும் இப்படி பாதியிலேயே முடிவுக்கு வந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
