திருப்பூர் ஊத்துக்குளி சாலை கருமாரபாளையம் அருகே உள்ள மூகாம்பிகை நகர் குடியிருப்பு பகுதியில், பூட்டிக்கிடந்த லைன் வீடு ஒன்றில் இருந்து கடந்த சில தினங்களாக துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்குள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டின் உள்ளே பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில், கைகள் கருகிய நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அதே அறையில் அவரது கணவர் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த சரவணகுமார் (27) மற்றும் அவரது மனைவி ஸ்ரீமதி (20) என்பதும், கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள், கடந்த ஐந்து மாதங்களாக இந்த வாடகை வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது.
வெல்டிங் தொழிலாளியான சரவணகுமார் சமீபகாலமாக சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்த நிலையில், நான்கு மாத கர்ப்பிணியான ஸ்ரீமதியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதுபோதையில் வீட்டிற்கு வந்த சரவணகுமார், மனைவியை கொடூரமாக தாக்கியதில் ஸ்ரீமதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மனைவியின் கொலையை மறைப்பதற்காக, அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது போல ஜோடிக்க முயன்று ஸ்ரீமதியின் கைகளை மின்சார கம்பியால் சுட்டதும் விசாரணையில் அம்பலமானது. எனினும், கொலையை மறைக்க முடியாத விரக்தியில், கடந்த 3ஆம் தேதி மதியம் சரவணகுமார் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காதலித்து கரம் பிடித்த மனைவியை, அவர் கர்ப்பிணி என்றும் பாராமல் சந்தேகப் பேயால் அடித்துக் கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலை செய்துகொண்ட இச்சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
