காசியாபாத் மாவட்டம் லோனியைச் சேர்ந்த ரிஸ்வானா (31) மற்றும் அவரது கணவர் நிசார் தங்களது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த குடியிருப்பில், மேல் தளத்தில் தங்கியிருந்த ஃபைசான் என்பவருடன் ரிஸ்வானாவுக்குத் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த நிசார், ஃபைசானைக் கண்டித்து வீட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஃபைசான், ஜூலை 7 அன்று அங்கிருந்து வெளியேறும்போது, “உன் மனைவி எனக்குச் சொந்தமாக இல்லையென்றால், வேறு யாருக்கும் சொந்தமாக மாட்டாள்” என்று நிசாருக்குக் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் சனிக்கிழமையன்று நிசார் வீட்டில் இல்லாத நேரத்தில், அண்டை வீட்டுக்காரர் தொலைபேசியில் அழைத்து ஆபத்து குறித்துக் கூறியதை அடுத்து நிசார் விரைந்து வந்துள்ளார். அங்கு ரிஸ்வானா கழுத்தில் சுருக்குக் கயிற்றுடன் சுயநினைவின்றிப் போராடிக்கொண்டிருந்ததைக் கண்டு, உடனடியாக ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். இருப்பினும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பார்வையற்றவரான நிசாரின் 8 வயது மகன் அஹத், தந்தை வெளியே சென்ற சிறிது நேரத்திலேயே ஃபைசான் வீட்டிற்குள் வந்து தாயைக் கொலை செய்ததை நேரில் பார்த்ததாகக் கூறியுள்ளார்.
மருத்துவர்களும் ரிஸ்வானா கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தற்கொலை அல்ல, கொலை என்பது தெரியவந்தது. இதையடுத்து லோனி காவல் துறையினர் ஃபைசான் மீது பிஎன்எஸ் பிரிவு 103 (கொலை)-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள குற்றவாளியைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னுடன் வர மறுத்ததால் ரிஸ்வானாவை ஃபைசான் கொன்றிருக்கலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
