பிரபல நடிகரான எம்ஜிஆருக்கு ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் படங்கள் என்றால் மக்கள் ஆர்வமாக போட்டி போட்டு பார்ப்பார்கள். எம்ஜிஆர் நம்பியார் காம்பினேஷனில் வந்த படம் திருடாதே. பிரபல நடிகரான எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1961-ஆம் ஆண்டு திருடாதே திரைப்படம் ரிலீஸ் ஆனது.
எம்ஜிஆர் பேண்ட் சட்டை போட்டு நடித்த முதல் சமூக படம் இதுதான். இந்த படத்தை பி.நீலகண்டன் இயக்கினார். இதில் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை ஏஎல் சீனிவாசன் தயாரித்தார். திருடாதே திரைப்படம் எம்ஜிஆர் சினிமா வாழ்க்கையில் வரும் திருப்புமுனையாக அமைந்தது.
இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தியேட்டரில் ஒளிபரப்பியபோது அனைவரும் மும்முரமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு காட்சியில் நம்பியார் படிக்கட்டுகளின் கீழ் ஒளிந்து கொண்டிருந்தார். அப்போது எம்ஜிஆர் ஒவ்வொரு படிக்கட்டாக கீழே இறங்கி வந்தார்.
தியேட்டரே அமைதியாக இருந்தது. திடீரென ஒரு பெண் மட்டும் எழுந்து தம்பி நீங்க கீழே இறங்காதீங்க அந்த கொலைகார பாவி படிக்கட்டுக்கு கீழே ஒளிஞ்சிருக்கான். நீங்க அப்படியே போயிருங்க என சத்தம் போட்டு நம்பியாரை திட்டுகிறார். இதுகுறித்து அறிந்த எம்ஜிஆரும், நம்பியாரும் ஒரு கதை என்றால் இப்படித்தான் மக்களிடையே அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வத்தை தூண்டும் விதமாக இருக்க வேண்டும் என பேசிக்கொள்கின்றனர். இந்த தகவலை பிரபல நடிகரான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.