நான் என் சொத்தை விற்றபோது என் மனைவி அழுதார்… அப்போது அந்த முடிவை எடுத்தேன் – இயக்குனர் சுந்தர் சி பகிர்ந்த எமோஷனல் தருணம்!

By vinoth on மார்ச் 24, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுந்தர் சி காமெடி, கிளாமர், ஆக்‌ஷன் என கலந்து கட்டி மசாலா படமாக எடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.

சுந்தர் சி படத்துக்கு சென்றால் வாய்விட்டு சிரித்து ரசித்துவிட்டு வரலாம் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதற்கேற்றார் போல சுந்தர் சி படங்கள் சுமாராக் இருந்தாலும் காமெடி கட்டாயம் ஹிட்டாகிவிடும். அதே போல சொன்ன பட்ஜெட்டில் சொன்ன தேதிக்குள் படத்தை எடுத்துக் கொடுத்துவிடுவார் என்ற நல்ல பெயரும் சுந்தர் சி க்கு உண்டு. அதே போல ஷூட்டிங்கில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை மாற்று யோசனை செய்து சமாளித்துவிடுவார் என்றும் அவரைப் பற்றி சொல்லப்படுவதுண்டு.

   

அவரது படங்கள் எப்போதுமே மினிமம் கியாரண்டி என்பதற்கு சமீபத்தில் ரிலீஸாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் ‘மத கஜ ராஜா’ திரைப்படமே உதாரணம். இந்த படம் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகி யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றிப் படமாகியுள்ளது. பொங்கலுக்கு ரிலீஸான பல படங்களில் அதிகம் வசூல் செய்த படமாக உள்ளது.

   

 

சுந்தர் சி தன்னுடைய மசாலாப் படங்கள் ஸ்டைலை விட்டு இயக்கிய வித்தியாசமான படங்களில் ஒன்று ‘அன்பே சிவம்’. கமல்ஹாசன் கேட்டுக் கொண்டதற்காக அந்த படத்தை அவர் இயக்கினார். ஆனால் அந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது. அதனால் அடுத்த சில மாதங்கள் சுந்தர் சி க்கு அடுத்தப் பட இயக்க வாய்ப்புகள் வரவில்லை.

இதுபற்றி பேசியுள்ள அவர் “அந்த காலகட்டத்தில் எனக்கு வரவேண்டிய பணம் வரவில்லை. அதனால் சில வரிப் பிரச்சனைகளால் நான் சம்பாதித்து முதல் முதலாக வாங்கிய ஒரு வீட்டை விற்றேன். நான் செண்ட்டிமெண்டலான ஆள் இல்லை. ஆனால் அதை நான் விற்றபோது என் மனைவி அழுதார். அப்போது நான் முடிவு பண்ணினேன். இனிமேல் என் மனைவி கண்ணில் நான் கண்ணீரைப் பார்க்கக் கூடாது என்று. அதை இப்போதுவரை நான் காப்பாற்றி வருகிறேன் என்பதுதான் என் சாதனையாகப் பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.