பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஸ்டார். இந்த திரைப்படத்தில் கவின் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதிதி போங்கர் நடித்திருக்கின்றார். அதைத்தொடர்ந்து ப்ரீத்தி முகுந்தன், லால் கீதா, கைலாசம், ராஜா ராணி பாண்டியன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்கள்.
ஒரு இளைஞன் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் வரும்போது அவர் சந்திக்கும் பல பிரச்சனைகளை எடுத்துக்காட்டும் திரைப்படமாக இப்படம் அமைந்திருந்தது. இந்த திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களில் சுமாரான வெற்றியை பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும். மூன்று நாள் முடிவில் 12 கோடி வசூல் செய்துள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள்.
இயக்குனர் இளன் ராஜா ராணி படத்தில் ஜெய் அவர்களுக்கு அப்பாவாக நடித்திருந்த பாண்டியனின் மகன் ஆவார். தொடர்ந்து படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் இளன் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: “முதல் நாள் காட்சியில் முகம் அறியா சகோதரன் ஒருவன் ஓடி வந்து கேட்டான், உங்களை கட்டிப்பிடித்து கொள்ளலாமா அந்த இருகணம் அன்பு மட்டும் வெளிப்பட்டது.
ஒரு கணவனும் மனைவியும் திரையரங்கையும் விட்டு விலகவே இல்லை, தேம்பி தேம்பி அழுதார்கள். நானும் அழுதேன். அந்த கண்ணீரும் அன்பே.. திரையரங்கை சுத்தம் செய்யும் பணி பெண் கன்னத்தைப் பிடித்து சுத்தி போட்டது என் தாயின் அன்பை வெளிப்படுத்தியது. பல இடங்களில் கைத்தட்டலும் கரகோஷங்களும், லவ் யூ என்று சொல்வதாகவே தோன்றியது. இறுதிக்காட்சியின் வரவேற்பு என்னுள் உள்ள எழுத்தாளனை இன்னும் தைரியசாலியாக மாற்றியுள்ளது.
ரோலிங் கிரியேட்ஸ் போட்டவுடன் எழுந்து செல்வதே வழக்கம். ஆனால் நான் கண்டதோ காதலியை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாத காதலர்களை தான். ஒரு சில விமர்சனங்கள் நான் ஒரு கலைஞனாய் மெருகேற உதவுகின்றது. நம்பிக்கைக்கு நன்றி, கூட்டம் அலைமோதுகிறது, பகலிலும் மதியத்திலும் இரவிலும்.. சிலரின் கனவிலும் ஸ்டார் ஒலிக்கின்றது” என்று ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.