தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயா சாதித்து சினிமா உலகின் கவனத்தை ஈர்த்தவர்களில் ஒருவர்தான் இயக்குனர் ஸ்ரீதர். 1954ம் ஆண்டு தன்னுடைய 21 ஆவது வயதில், சிவாஜி கணேசன், பத்மினி நடித்த எதிர்பாராதது என்ற திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்தப்படத்தை இயக்கியவர் சித்தரப்பு நாராயணமூர்த்தி. அதன்பின்னர் ஸ்ரீதருக்கு வரிசையாக படங்களில் கதை எழுத வாய்ப்புகள் குவிந்தன. அப்படி ஸ்கிரிப்ட் எழுதிய மற்றொரு ஹிட் திரைப்படம் அமரதீபம். இந்தப்படம் வெளியான ஆண்டு 1956.
இப்படி பல ஹிட் படங்களுக்கு கதை எழுதிய ஸ்ரீதர் கல்யாண பரிசு என்ற படத்தின் மூலம் தானே இயக்குனர் ஆனார். அந்த படமே தமிழ் சினிமாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கோணக் காதல் கதையை வித்தியாசமான பாணியில் அவர் உருவாக்கியிருந்தார். அதன் பின்னர் நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை , சிவந்த மண் பொன்ற ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்தார்.
ஸ்ரீதர் இயக்கத்தில் 1962ம் வருடம் வெளியான திரைப்படம் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’. இந்த படத்தில் கல்யாண் குமார், முத்துராமன், நாகேஷ், தேவிகா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் ஒரே ஒரு செட்டில் மொத்த படமும் படமாக்கப்பட்டு சூப்பர் ஹிட் ஆனது. வழக்கமாக ஸ்ரீதர் படங்களில் பாடல்கள் ஹிட் ஆவது போல இந்த படத்தின் பாடல்களும் ஹிட்டாகின. இந்த படத்தில் அனைத்துப் பாடல்களையும் கண்ணாதசன் அவ்வளவு அற்புதமான பாடல்களை எழுதியிருப்பார்.
படம் ஷூட்டிங் முடிந்து சென்சாருக்கு செல்ல தயாராக இருந்தது. அதற்கு முதல் நாள் இந்த படத்தில் மற்றொரு துள்ளலான பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என ஸ்ரீதருக்கு யோசனை தோன்றியுள்ளது. உடனடியாக விஸ்வநாதன் – ராமமூர்த்தி அழைத்து சொல்ல ஒரு மயக்கும் டியூனை உருவாக்கினர். உடனே, கண்ணதாசனை தேடினர். அவர் வந்து 15 நிமிடங்களில் பாடலை எழுதி கொடுத்தார். அதுதான் ‘முத்தான முத்தல்லவோ’ பாடல் ஆகும். பி.சுசிலா பாடி ரிக்கார்டிங் செய்தார்கள்.
இந்த பாடலை உடனெ ஒருநாளில் படமாக்கப்பட்டுள்ளது. நாகேஷை வைத்து சில காட்சிகளையும், முத்துராமன், தேவிகாவை வைத்து சில காட்சிகளையும் படமாக்கி பாடலை எடிட் செய்துள்ளனர். உடனடியாக தயாராக இருந்த படத்தில் அந்த பாடலை சேர்த்து அடுத்த நாளில் சென்சார் செய்யப்பட்டுள்ளது. அப்படி அவசர அவசரமாக எடுக்கப்பட்ட பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடலாக உருவாகியுள்ளது.