ஒரு சிலருக்குதான் சினிமா வாழ்க்கை எப்போதுமே மேல்நோக்கி செல்லும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஸ்ரீதேவி. 1969-ஆம் ஆண்டு ரிலீசான துணைவன் என்ற திரைப்படத்தில் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார். கடந்த 1976-ஆம் ஆண்டு கே.பாலச்சந்தரின் மூன்று முடிச்சு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தனது பயணத்தை ஆரம்பித்தார்.
முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோருடன் இணைந்து ஸ்ரீதேவி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அவர் நடிப்பில் வெளியான 16 வயதினிலே, மூன்றாம் பிறை மற்றும் வாழ்வே மாயம் போன்ற எண்ணற்ற படங்கள் அவரை முன்னணிக் கதாநாயகி ஆக்கின.தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து அந்த காலத்திலேயே பான் இந்தியா நடிகையாக வலம் வந்தார்.’
மூன்றாம் பிறை படத்தின் இந்தி பதிப்பான சத்மா படம் வெளியாகி சூப்பர் ஹிட்டாக அவருக்கு அங்கு மிகப்பெரிய மார்க்கெட் உருவானது. அதன் பிறகு அவர் தமிழில் படங்கள் நடிக்கவிலை. அடுத்தடுத்து இந்தி படங்களில் நடித்து சூப்பர் ஸ்டார் நடிகையானார். 80 களிலும் 90 களின் தொடக்கத்திலும் அவரின் படங்கள் இந்தியா முழுவதும் சூப்பர் ஹிட்டாகின. அந்த காலத்தில் அவர் அறிவிக்கப்படாத மிஸ் இந்தியாவாக இருந்தார். இந்திக்கு சென்ற பின்னர் அவர் பெரும்பாலும் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. புகழில் எப்படி விரைவாக உச்சங்களைத் தொட்டாரோ, அப்படியே மரணத்தையும் விரைவில் தொட்டார். 53 வயதில் அவர் துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் வாழ்க்கையில் நடந்த ஒரு சமபவத்தைதான் இயக்குனர் ஷங்கர் தன்னுடைய ஜீன்ஸ் படத்தில் ஒரு முக்கியமான உப கதையாக வைத்துள்ளார் என்பது பலரும் அறியாதது. ஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரும் பங்காற்றியவர் அவரின் தாயார் ராஜேஸ்வரி அவர்கள்.
அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட தவறுதலாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை மாற்றி செய்துவிட்டார்கள். இது வெளியில் தெரிந்து பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு மீண்டும் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதைதான் ஜீன்ஸ் படத்தில் கதாநாயகியின் பாட்டி கதாபாத்திரத்திற்கு அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் வலப்பக்கம் மூளையில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை இடப்பக்கம் செய்துவிடுவது போல காட்சிகளாக ஷங்கர் பயன்படுத்தி இருப்பார். இந்த காட்சிகள் படம் வந்த போது பெரியளவில் ரசிகர்களைக் கவர்ந்த்ன.