ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராஜா கோப் என்ற சிறுவன், தனது 6 வயதில் தந்தையைப் பிரிந்து தவறுதலாக வேறு ஒரு ரயிலில் ஏறி கேரளா சென்று சேர்ந்துவிட்டான். தாய்மொழி வரை அனைத்தையும் மறந்து, பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேரளாவில் அனாதையாக வளர்ந்து வந்த அந்தச் சிறுவனை அவனது குடும்பத்தினர் கடந்த 13 ஆண்டுகளாகத் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் ஜார்கண்ட் மற்றும் கேரள மாநிலப் போலீசாரின் தீவிர முயற்சியாலும் ஒருங்கிணைப்பாலும், 13 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜா கோப் பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டு அவனது சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டான்.
13 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாய் மற்றும் 4 சகோதரிகளுடன் ராஜா மீண்டும் இணைந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊருக்குத் திரும்பிய ராஜாவை கிராம மக்களும், அவனது பழைய பள்ளி மாணவர்களும் மேள தாளங்கள் மற்றும் நடனத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்று உற்சாகமாக வரவேற்றனர். “நம்பிக்கை ஒருபோதும் வீண் போகாது” என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.
