கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் கே.ஹஞ்சிகலா முகாம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவரது மனைவி நதாப். இந்தத் தம்பதியின் பச்சிளம் குழந்தை, அவர்கள் வசிக்கும் பகுதியிலிருந்த தெருநாய்களின் கோரத் தாக்குதலுக்கு ஆளானது.
குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சுமார் 6 தெருநாய்கள் திடீரென குழந்தையைச் சூழ்ந்து கொண்டு கொடூரமாகக் கடித்துக் குதறின. நாய்களின் இந்த வெறித்தனமான தாக்குதலால் நிலை குலைந்து போன குழந்தை அலறியடித்தபடி கீழே விழுந்தது. உடனே அந்தத் தெருநாய்கள் இரக்கமின்றி குழந்தையைத் தரதரவென இழுத்துச் சென்றன.
இந்தக் கொடூரத் தாக்குதலில் குழந்தையின் கழுத்து, மார்பு, முதுகு உள்பட உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த குழந்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாக நாய்களை விரட்டிவிட்டு, குழந்தையை மீட்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
