அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள்..!வனத்துறையின் நாடகம் அம்பலமா?… 3 தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரத்தில் அம்பலமான பகீர் மர்மம்…!!

By Gayathri on ஆவணி 23, 2026

Spread the love

கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுதியில் கடந்த 15ஆம் தேதி, காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்ற அந்தோணிசாமி, ஜான்ரோஸ் பீட்டர், டேவிட்குமார் ஆகிய மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மான் வேட்டையாட வந்தவர்கள் தங்களைத் தாக்க முயன்றதால் தற்காப்புக்காகச் சுட்டதாக வனத்துறையினர் விளக்கமளித்தனர். ஆனால், எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகளை வனத்துறையினர் அநியாயமாகக் கொன்றுவிட்டதாக உறவினர்களும், தமிழக அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருவதுடன், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவத்தின்போது மகிமைதாஸ் என்பவர் காயங்களுடன் தப்பிச் சென்றுள்ளார்.

இந்த விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வழக்கை விசாரித்து வரும் சாம்ராஜ்நகர் உதவி ஆட்சியர் தினேஷ்குமார் மீனாவிடம் வனத்துறையினர் சில புதிய ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளனர். ஏற்கனவே துப்பாக்கிகள் மற்றும் மான் இறைச்சியைக் கைப்பற்றியதாகக் கூறிய அவர்கள், தற்போது கத்திகள், திருப்புலிகள், மொபைல் போன்கள், டார்ச் லைட்டுகள் மற்றும் மீன் வலைகள் ஆகியவற்றை ஒப்படைத்துள்ளனர். இதில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது அவர்கள் சமர்ப்பித்துள்ள ஒரு ஜோடி ரப்பர் செருப்புதான். அந்தச் செருப்பில் உள்ள விலையைக் குறிக்கும் ஸ்டிக்கர் கூட கிழிக்கப்படாமல் புத்தம் புதிதாக இருப்பது பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

   

உண்மையிலேயே அங்கு மோதல் நடந்திருந்தால் அந்தச் செருப்பு அழுக்காகியிருக்க வேண்டும்; எனவே சுட்டுக்கொல்லப்பட்டவர்களைக் கொடூரமான வேட்டைக்காரர்களாகச் சித்தரிப்பதற்காக வனத்துறையினரே இத்தகைய போலியான ஆதாரங்களை ஜோடித்துள்ளார்கள் எனப் பலியானவர்களின் குடும்பத்தினர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கிடையே, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து தலைமறைவாக இருக்கும் மகிமைதாஸ், விசாரணை அதிகாரிகளிடம் நேரில் ஆஜராகத் தமக்கு மிகவும் அச்சமாக இருப்பதாகத் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட வனத்துறையினர் மீது கர்நாடக காவல்துறை இதுவரை எவ்வித வழக்கும் பதிவு செய்யாத நிலையில், உதவி ஆட்சியர் தலைமையிலான விசாரணை மட்டுமே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.