90-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல், குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த அவர், 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது பாஜகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சௌந்தர்யாவும் அவரது சகோதரரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவரது மறைவு ஏற்பட்டு 22 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பிரபல இயக்குநர் கீதா கிருஷ்ணா சௌந்தர்யாவின் மரணம் குறித்து அண்மையில் பகிர்ந்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சௌந்தர்யா ஒரு சிறந்த நடிகை என்று பாராட்டிய அவர், “பாஜக தலைவர் வித்யாசாகர் ராவ் கொடுத்த வெறும் இரண்டு லட்ச ரூபாய்க்கு ஆசைப்பட்டு சௌந்தர்யா தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றார்; அந்த தவறான முடிவால்தான் அவர் தனது உயிரை இழக்க நேரிட்டது” என்று தெரிவித்துள்ளார். மேலும், அன்று அவர் அந்தப் பணத்திற்காகப் பிரச்சாரத்திற்குச் செல்லாமல் இருந்திருந்தால் இன்று நம்மோடு இருந்திருப்பார் என்றும் வேதனையுடன் கூறியுள்ளார்.
இயக்குநர் கீதா கிருஷ்ணாவின் இந்த அதிரடித் தகவல் சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தையும், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சௌந்தர்யாவின் அகால மரணத்தை வெறும் இரண்டு லட்ச ரூபாய் பணத்தோடு ஒப்பிட்டுப் பேசுவது முறையற்றது என்று ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், சௌந்தர்யா மீது இருந்த அன்பினாலும், அவரது பேரிழப்பால் ஏற்பட்ட ஆதங்கத்தினாலும்தான் இயக்குநர் இவ்வாறு பேசியிருக்கக் கூடும் என்றும் சிலர் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
