செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வீட்டில் தனியாக இருந்த 10 வயது மாற்றுத்திறனாளிச் சிறுமி, மர்மக் கும்பலால் வாயில் துணி பொத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மேல்மருவத்தூர் மகளிர் காவல்துறையினர், சிறுமியைச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவரது பெற்றோரையும் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சிபிஎம் மூத்த தலைவர் கே. பாலபாரதி, மதுராந்தகம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் பி. சுகந்தி உள்ளிட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால், போக்சோ வார்டில் சிறுமியோ அவரது பெற்றோரோ இல்லாததும், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகமோ அல்லது காவல்துறையோ முறையான பதில் அளிக்காததும் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாலபாரதி கூறியதாவது, “மதுராந்தகம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து மாற்றுத்திறனாளிச் சிறுமிகள் பாதிக்கப்படுவது கொடூரமானது. தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிதீவிரமாக இருப்பதே இதுபோன்ற குற்றங்களுக்குக் காரணம். பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. காவல்துறையும் உளவுத்துறையும் தீவிரமான நடவடிக்கையில் இறங்க வேண்டும்” எனக் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
