‘பூவே பூச்சூடவா’, ‘செல்லமே செல்லமே’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் சீரியல்கள் மூலம் சின்னத்திரையில் பிரபலமடைந்த நடிகை ரேஷ்மா முரளிதரன், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சிறுவயதில் குடும்பத்தில் தான் அனுபவித்த நரக வேதனைகளையும் கொடுமைகளையும் கண்ணீர் மல்கப் பகிர்ந்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த ரேஷ்மா முரளிதரன் கூறியதாவது: “நான் மதுரையில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தேன்.
எங்களை தைரியமாக வளர்க்க ஆசைப்பட்ட எங்கள் அப்பா திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துவிட்டார். அதன்பிறகு சென்னைக்கு வந்து அம்மா கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார். எங்கள் எதிர்காலம் கருதி அம்மாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தோம். ஆனால், அந்த நபர் மிகவும் மோசமான டாக்ஸிக் மற்றும் சைக்கோ குணம்கொண்டவராக இருந்தார். அம்மா அழகான உடை அணிந்தால் கூட சந்தேகப்பட்டு அடிப்பார். அவர் அடித்து அம்மா தலையிலிருந்து ரத்தம் சொட்டுவதைக் என் கண்ணால் பார்த்திருக்கிறேன்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “அப்போது நான் 8ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் என் தங்கையின் கையை ‘கட்டிங் பிளையர்’ வைத்து வெட்டிவிடுவேன் என்று அம்மாவை அவர் மிரட்டினார். பக்கத்து வீட்டுக்காரர்களிடம் உதவி கேட்கக்கூட முடியாத அளவுக்குப் பயமான சூழ்நிலை இருந்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு அந்த நரக வாழ்க்கையிலிருந்து அம்மாவை விவாகரத்து பெற வைத்து மீட்டோம். இன்றைய தேதியில் நான் சந்திக்கும் மனப்பதற்றம் மற்றும் அழுத்தத்திற்குக் காரணம் சிறுவயதில் நான் அனுபவித்த அந்த மோசமான சம்பவங்களே தவிர வேறொன்றும் இல்லை” என்று வேதனை தெரிவித்தார். இவரின் இந்த உருக்கமான பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பலரும் அவருக்கு ஆறுதல்களையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
