திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், கட்சியினுடைய நிர்வாக அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் முக்கிய மறுசீரமைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை 75 ஆக இருந்த திமுக மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்பட உள்ளது. பொதுவாக இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற அடிப்படையில் இந்த மாவட்டங்கள் பிரிக்கப்படுகின்றன. இருப்பினும், முக்கிய நிர்வாகிகளின் பொறுப்பில் உள்ள சில மாவட்டங்களுக்கு மட்டும் மூன்று சட்டமன்ற தொகுதிகள் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய மறுசீரமைப்பின் கீழ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வசமிருந்த கரூர் மாவட்டம் தற்போது ‘கரூர் மேற்கு’ மற்றும் ‘கரூர் கிழக்கு’ என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டு சீரமைக்கப்பட்டுள்ள முக்கிய மாவட்டங்களின் பட்டியல்:
- திருநெல்வேலி: திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை
- சேலம்: சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு
- கடலூர்: புவனகிரி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம்
- விழுப்புரம்: திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம்
- சென்னை: துறைமுகம், திரு.வி.க. நகர், வில்லிவாக்கம் மற்றும் மயிலாப்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி அடங்கிய பகுதிகள்
இம்மாற்றங்கள் அனைத்தும் தேர்தல் பணிகளை விரைவுபடுத்தவும், கள அளவில் கட்சிப் பணிகளை மேலும் தீவிரப்படுத்தவும் பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
