எந்த நேரத்திலும் கைது?…. செந்தில் பாலாஜியை சுற்றி வளைக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை… அதிகாரிகளுக்கு விஜய் போட்ட ஆர்டர்….!

By Nanthini on ஆடி 31, 2026

Spread the love

டாஸ்மாக் லஞ்ச ஊழல் வழக்கின் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. 2021 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் பார் உரிமங்கள் வழங்கியது, 45 டாஸ்மாக் டிப்போக்களுக்கான போக்குவரத்து டெண்டர்கள் மற்றும் மதுபான நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டது எனப் பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இவர் மீது 145 பக்கங்கள் கொண்ட விரிவான முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. மூடப்பட்டதாக ஆவணங்களில் காட்டப்பட்ட 284 பார்கள் சட்டவிரோதமாக இயங்கியதன் மூலம் அரசு கருவூலத்திற்கு ₹32.81 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு, கரூரில் உள்ள இவரது வீடு உட்பட மாநிலம் முழுவதும் 41 இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.

லஞ்ச ஒழிப்புத் துறையின் தீவிர விசாரணையைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், அரசு கருவூலத்திற்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் தீவிரத் தன்மையைச் சுட்டிக்காட்டினார். வழக்கின் முழு உண்மையையும் வெளிக்கொணர செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து விசாரிப்பது அவசியமானது என்று கூறி, அவரது முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.

   

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் முகுல் ரோஹத்கி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். தமக்கு எதிராக உடனடி கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதால், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் எனச் தலைமை நீதிபதி அமர்வு முன் முறையிடப்பட்டுள்ளது. அதேவேளையில், தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்தவொரு இடைக்காலத் தடையோ அல்லது உத்தரவோ பிறப்பிக்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் முன்னெச்சரிக்கையாகக் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

   

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனு ஆகியவற்றின் பின்னணியில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்குத் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு இடைக்காலப் பாதுகாப்பு கிடைக்காத பட்சத்தில், அவரை உடனடியாகக் கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அடுத்தடுத்த திருப்பங்கள் காரணமாகத் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.