டாஸ்மாக் முறைகேடு வழக்கு மற்றும் தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசிய வழக்கு என அடுத்தடுத்த சட்டச் சிக்கல்களில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிக்கியுள்ளார். குதிரை பேர வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்றுள்ள அவர், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனிடையே, டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அவரது முன்ஜாமீன் மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அவர் இன்று காவல் நிலையத்தில் கையெழுத்திட வருவாரா என்ற பலத்த எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, 2021 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதற்கும், அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதற்கும் போதுமான முகாந்திரம் இருப்பதால் அவரைப் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக நீதிபதி ஜி.கே.இளந்திரையன் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை எந்நேரமும் கைது செய்யலாம் என்ற நிலை உருவானது.
உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டிய செந்தில் பாலாஜி ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அவருடன் குற்றஞ்சாட்டப்பட்ட அவரது சகோதரர் அசோக்குமார் மட்டும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். செந்தில் பாலாஜியின் நிலை குறித்துச் செய்தியாளர்கள் கேட்டபோது, “அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்” எனக் கூறிய அசோக்குமார், மாலையில் மீண்டும் வந்தபோது “அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துச் செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த மனுவில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொறுத்தே செந்தில் பாலாஜியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் காவல்துறையின் நடவடிக்கை இருக்கும். அதேவேளையில், காவல் நிலையத்தில் தொடர்ந்து ஆஜராகத் தவறினால், குதிரை பேர வழக்கில் அவருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிபந்தனை முன்ஜாமீனும் ரத்தாகும் அபாயம் நிலவுகிறது.
