தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை (எம்.எல்.ஏக்கள்) விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற பெரும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பு வழக்கில் இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சதிச் செயலின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டது முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் என்பது சென்னை காவல்துறையின் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் முக்கிய அமைச்சராக வலம் வரலாம் என்ற எண்ணத்தில், செந்தில்பாலாஜி தனது கரூர் தொகுதியை விடுத்து கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் தவெக டன் கணக்கில் மண்ணை அள்ளிப்போட்டதால், தவெகவின் வெற்றியை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாகவே, “தவெக ஆட்சியை கவிழ்த்துக் காட்டுகிறேன்” என்று தனது நெருங்கிய வட்டாரத்தில் சவால் விட்டு, அதற்கான திரைமறைவு வேலைகளை அவர் தீவிரமாகத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
திட்டமிட்டபடி தவெக ஆட்சியை வீழ்த்தி மீண்டும் திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தால், தனக்கு ‘துணை முதலமைச்சர்’ பதவியைக் கேட்டு வாங்கிவிடலாம் என்ற கனவில் செந்தில்பாலாஜி இருந்துள்ளார். இதற்காக சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அறைகள் எடுக்கப்பட்டு, பல நாட்களாக சதி ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அங்கு தவெக எம்.எல்.ஏக்களுடன் தொடர்புடைய நபர்களை வரவழைத்துப் பேசியுள்ளனர். இந்த ரகசிய கூட்டங்களில் திமுக ஆட்சிக்காலத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் பங்கேற்றதாகக் கூறப்படும் நிலையில், மாநில உளவுத்துறை அவர்களின் பட்டியலைத் தீவிரமாகச் சேகரித்து வருகிறது.
அதிமுகவை முன்னிறுத்தி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது, அதற்கு ஆதரவாக தவெக எம்.எல்.ஏக்களை வாக்களிக்கச் செய்து ஆட்சியைத் கவிழ்ப்பதுமே இவர்களின் முக்கிய திட்டமாக இருந்துள்ளது. மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்குச் சம்மதிக்க மாட்டார் என்று கருதி, திமுக தலைமைக்கே தெரியாமல் செந்தில்பாலாஜியும் அவரது தம்பி அசோக்கும் இந்த சதியில் ஈடுபட்டுள்ளனர். எப்படியாவது ஆட்சியைத் தலைகீழாக மாற்றி, உதயநிதி ஸ்டாலினிடம் நல்ல பெயர் எடுத்து கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பையும், துணை முதல்வர் பதவியையும் பெற்றுவிடலாம் என்ற செந்தில்பாலாஜியின் பகீரத முயற்சி தற்போது காவல்துறையின் விசாரணையால் அம்பலமாகியுள்ளது.
