தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ள நிலையில் கட்சி நிர்வாகிகள் பலரும் இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ளனர்.
அதன் வெளிப்பாடாக நேற்று முன்தினம் செங்கோட்டையன் இபிஸ்க்கு எதிராக திரும்பி அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என பத்து நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இபிஎஸ் நேற்று ஆலோசனை நடத்தி செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளார். அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என இபிஎஸ்-க்கு செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் நேற்று இபிஎஸ் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி உத்தரவிட்டிருந்தார். இதனால் செங்கோட்டையன் அடுத்த கட்ட நடவடிக்கையில் தீவிரம் காட்டியுள்ளார். இது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
