ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். கடந்த தேர்தல்களின் போது அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இருந்து தங்களுக்குக் கூட்டணி அழைப்பு வந்ததாகவும், அப்போது 40 தொகுதிகள் மற்றும் 400 கோடி ரூபாய் தருவதாகக் கூறப்பட்டதாகவும் தெரிவித்தார் . மேலும் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது குறித்துக் கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசியல் சூழலில் அவர்களுக்கு அந்த ஒரு வாய்ப்பு மட்டுமே எஞ்சியிருந்ததால் அவர்கள் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
பின்னர் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு குறித்துப் பேசிய அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 234 தொகுதிகளிலும் சரிசமமாக 117 ஆண்கள் மற்றும் 117 பெண்கள் வேட்பாளர்களாகக் களம் இறக்கப்படுவார்கள் என்றும், இந்த முழுமையான வேட்பாளர் பட்டியலை வரும் பிப்ரவரி 21, 2026 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள “மக்களின் மாநாடு” என்ற பிரம்மாண்ட நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். இதன் மூலம் மற்ற கட்சிகளுக்கு முன்னதாகவே தேர்தல் பணிகளை நாம் தமிழர் கட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
