“பிரஸ் மீட் கிடையாது, அறிக்கை தான்”…. தேர்தல் தோல்விக்குப் பின் சீமான் எடுத்த அதிரடி முடிவு… ‘பார்ட் டைம்’ அரசியல்வாதியாக மாறுகிறாரா சீமான்?….!

By Nanthini on ஆவணி 30, 2026

Spread the love

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அரசியல் நடவடிக்கைகளில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட வைப்புத்தொகையை (டெபாசிட்) தக்கவைக்க முடியாதது கட்சி தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான் தானும் டெபாசிட் இழந்து தோல்வியடைந்ததால், கடந்த நான்கு மாதங்களாகவே நாதகவினர் சோர்வில் ஆழ்ந்துள்ளனர். தற்போது கட்சியின் குரலாகச் சாட்டை துரைமுருகன் மற்றும் இடும்பாவனம் கார்த்தி ஆகியோர் மட்டுமே விவாதங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகு சீமான் தனது அணுகுமுறையை முழுமையாக மாற்றிக் கொண்டுள்ளார். முன்பெல்லாம் நாள்தோறும் செய்தியாளர்களைச் சந்தித்து காரசாரமானக் கருத்துகளைத் தெரிவித்து வந்த அவர், பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். ஆனால் தற்போது தவெக தலைவர் விஜய்யின் பாணியைப் பின்பற்றி, செய்தியாளர்களின் கேள்விகளைச் சிரித்த முகத்துடன் கடந்து செல்வதையும், அறிக்கைகள் மற்றும் மேடைப் பேச்சுகள் மூலமாக மட்டுமே தனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். அண்மையில் தவெக எம்.எல்.ஏ கருப்பையாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த நிகழ்விலும் அவர் அறிக்கை மற்றும் மேடைப் பேச்சு மூலமே பதிலடி கொடுத்திருந்தார்.

   

அரசியல் ரீதியான பின்னடைவை ஈடுகட்டவும், இளைஞர்களுடனான தொடர்பைப் புதுப்பிக்கவும் சீமான் மீண்டும் சினிமாவில் தீவிரமாக இறங்கத் திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே ‘LIK’ படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது சாந்தனு நடிக்கும் புதிய படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இனி வரும் காலங்களில் “பகுதி நேர அரசியல்வாதியாக” வலம் வர அவர் முடிவு செய்திருப்பதாக வெளியாகும் தகவல்கள், ஏற்கனவே உற்சாகமிழந்து இருக்கும் நாதக தம்பிகளிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

   

அதேவேளையில், வரவிருக்கும் அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைய சீமான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். நாதக ஏற்கனவே களப்பணிகளைத் தொடங்கிவிட்ட நிலையில், அத்தொகுதியில் சீமானைப் பொது வேட்பாளராகக் களம் இறக்க அக்கட்சியினர் விரும்புகின்றனர். இதற்காகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சீமான் நேரில் சந்தித்துப் பேசி வருகிறார். இருப்பினும், திமுக மற்றும் அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் இந்த விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவை அறிவிக்காமல் பிடி கொடுக்காமல் இருந்து வருகின்றன.