Counter மணி என்ற பெயர் கவுண்டமணி ஆனது எப்படி… பாக்யராஜ் பகிர்ந்த பலரும் அறியாத தகவல்!

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.

16 வயதினிலே திரைப்படம் பெரிய ஹிட்டானாலும் அடுத்தடுத்து கவுண்டமணிக்கு வாய்ப்புகள் குவியவில்லை. அதையடுத்து பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்திலும் வாய்ப்புக்காக போராட வேண்டி இருந்துள்ளது. அந்த படத்தில் காந்திமதியின் கணவராக நடிக்கும் கதாபாத்திரத்துக்கு கவுண்டமணியைப் போடலாம் என உதவி இயக்குனர் பாக்யராஜ் உள்ளிட்டவர்கள் கூறியுள்ளார்கள். அதன் பின்னர்தான் கிழக்கே போகும் ரயில் படத்தின் வாய்ப்பை கவுண்டமணிக்கு பாரதிராஜா அந்த வாய்ப்பை கொடுத்துள்ளார்.

   

இந்நிலையில் 16 வயதினிலே படத்தில் கவுண்டமணியின் பெயரில் தான் செய்த ஒரு பிழையைப் பற்றி பாக்யராஜ் பகிர்ந்துள்ளார். 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பாக்யராஜ் டைட்டில் கார்ட்டுக்கு கவுண்டமணியின் பெயரை கௌண்டமணி என எழுதி கொடுத்துள்ளார். ஆனால் அந்த படத்தில் பணியாற்றிய பாலகுரு அவரை அழைத்து அந்த பெயர் தப்பு எனக் கூறியுள்ளார்.

ஏன் என்று பாக்யராஜ் கேட்டதற்கு “அவர் பெயர் கவுண்டமணி இல்லை நாடகங்களில் நடிக்கும் போது யார் என்ன வசனம் சொன்னாலும் அதற்கு கவ்ண்ட்டராக காமெடியாக எதாவது சொல்லிவிடுவதால் அவரை கவ்ண்ட்டர் மணி என்று அழைப்பார்கள். ஆனால் நீ தப்பாக எழுதி கொடுத்துவிட்டாய்” எனக் கூறினாராம். ஆனால் அப்போது படத்தின் ப்ரிண்ட் தயாராகி விட்டதால் மாற்ற முடியவில்லையாம். அதன் பின்னர் அந்த பெயரே தொடர்ந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.