தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு எதிராகத் தமிழக அரசு கடும் நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது. ஜனவரி 5-ஆம் தேதி முதல் பணிக்கு வராத ஆசிரியர்களின் விவரங்களைச் சேகரித்து அனுப்பும்படி அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த விபரங்களின் அடிப்படையில், போராட்டத்தில் பங்கேற்றுப் பணிக்குத் திரும்பாத ஆசிரியர்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், தகுந்த காரணங்களுடன் மருத்துவ விடுப்பில் இருப்பவர்களுக்கு இந்த ஊதியப் பிடித்தத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம வேலைக்குச் சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர்கள் நடத்தி வரும் இந்தப் போராட்டத்தால் பள்ளிகளின் செயல்பாடு பாதிக்கப்படாமல் இருக்க அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
