கவுண்டமணி அண்ணனுக்கு நான் வசனம் எடுத்துக் கொடுப்பேன்…சில வசனங்கள் நான் பேசுனா எடுபடாது… சத்யராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

By vinoth on செப்டம்பர் 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன் கூட்டத்தில் ஒருவனாக இருந்து ‘எஸ் பாஸ்’ சொல்லியே நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் அவரை கதாநாயகனாக்கின.

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். ஹீரோவாக நடித்த போது தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ், இப்போது பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.  மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்போதும் தன் மகனை விட பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சத்யராஜ்.

   

2005 வரை ஹீரோவாக நடித்து வந்த சத்யராஜுக்கு அப்போது மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அதனால் அவர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் முடிவை எடுத்தார். அந்த முடிவு அவரை இன்று வரை பிஸியான நடிகராக வைத்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் மட்டும் இல்லாமல் தற்போது இந்தி படங்கள் வரை நடித்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

   

சத்யராஜ் ஹீரோவாக நடித்த காலகட்டத்தில் அவரின் பெரும்பாலான படங்களில் கவுண்டமணி இருப்பார். அவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் லொள்ளுக்கு அளவே இல்லாமல் இருக்கும். அந்த அளவுக்கு ரகளையானக் காமெடிக் காட்சிகள் அவர்கள் காம்பினேஷனலில் அமைந்திருக்கும்.

 

இந்நிலையில் கவுண்டமணியோடு இணைந்து நடித்த அனுபவம் பற்றி பேசியுள்ள சத்யராஜ் “நானும் கவுண்டமணி அண்ணனும் நடிக்கும் போது பேப்பரில் இருப்பதை அப்படியே பேசவே மாட்டோம். நாங்களாக கற்பனை பண்ணி சில வசனங்களை சேர்த்துக்கொள்வோம். பெரும்பாலான வசனங்கள் அப்படி திட்டமிடாமல் வந்தவைதான். சில வசனங்கள் நான் பேசினால் நகைச்சுவையாக இருக்காது என்று அவரிடம் கொடுத்து பேச சொல்வேன். அதனால் அவர் என்னை வசனகர்த்தா என்றுதான் அழைப்பார். வசன பேப்பரை கொடுத்து இதில் கொஞ்சம் வசனம் மாத்திக்கொடுய்யா என்று கிண்டல் செய்வார்” எனக் கூறியுள்ளார்.