தமிழ் சினிமாவில் 90 கள் முழுக்க முழுக்க காதல் திரைப்படங்களாக வெளியாகி பல இளம் ஹீரோக்கள் வளர்ந்து வர ஆரம்பித்தனர். அந்த காலகட்டத்தில்தான் விஜய், அஜித், பிரசாந்த், சூர்யா மற்றும் விக்ரம் ஆகியோர் உருவானார்கள்.
இவர்கள் நடித்த பெரும்பாலான படங்கள் அப்போது காதல்கதையாகவே இருந்தனர். இதில் பிரசாந்த் ஒரு சாக்லேட் பாயாக நிறைய காதல் படங்களில் நடித்து வந்தார். அப்படி அவர் நடிப்பில் உருவான திரைப்படம்தன் ஜோடி. ரட்சகன் படத்தை இயக்கிய பிரவீன் காந்த் இயக்கத்தில் உருவான இந்த படம் 1999 ஆம் ஆண்டு வெளியானது. ஏ ஆர் ரஹ்மானின் இசை இந்த படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸாக அமைந்தது. படம் ரிலீஸான போது அதன் வெற்றிக்கு பாடல்களும் முக்கியக் காரணம்.

Jodi movie
இந்த படத்தின் கதை என்னவென்றால் பிரசாந்தும் சிம்ரனும் மோதலில் ஆரம்பித்து காதலில் விழுவார்கள். ஆனால் அவர்கள் இருவரின் தந்தைகளும் காதலுக்கு எதிரானவர்கள்.அதனால் அவர்களை சமாதானப்படுத்த இருவரும் மற்றவர் வீட்டுக்கு சென்று அங்குள்ளவர்களிடம் நல்ல பேரை எடுத்து அவர்கள் மனதில் இடம்பிடித்து திருமணம் செய்துகொள்வதுதான் கதை.
இதே கதையில் சில சில மாற்றங்களோடு இந்த படத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வசந்த் இயக்கத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் ரிலீஸானது. இதிலும் அதே கதைதான். சூர்யாவின் தந்தையும், ஜோதிகாவின் தந்தையும் சிறுவயதில் ஒன்றாக இசையமைப்பாளர்களாகப் பணியாற்றியவர்கள். ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்துவிட, இப்போது அவர்கள் வாரிசுகள் காதலிக்கிறார்கள்.

Poovellam kettupaar movie
இந்த காதலை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் இவர்களும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இறுதியில் பெற்றோர்களை சம்மதிக்கவைத்து திருமணம் செய்துகொள்கின்றனர். இந்த இரு கதைகளுக்கு மட்டும் ஒற்றுமை இல்லை. இரண்டு படங்களிலும் கதாநாயகர்களின் தந்தையாக நடித்ததும் நாசர் மற்றும் விஜயகுமார் ஆகிய இரு நடிகர்கள்தான் என்பது இன்னும் ஆச்சர்யம். இதில் ஜோடி படம் ஓடிய அளவுக்கு பூவெல்லாம் கேட்டுப்பார் படம் ஓடவில்லை.
