11 பேர் கைது…. நள்ளிரவில் அரங்கேறிய கொடூரத் தாக்குதல்… நாகர்கோவில் சிறை வழக்கில் அதிரடி திருப்பம்… வெளிவந்த பகீர் தகவல்….!

By Nanthini on ஆடி 22, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த 34 வயதான மாற்றுத்திறனாளி சபரிவர்மன், தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் வைத்திருந்ததாகக் கூறி, கடந்த ஜூலை 9-ஆம் தேதி தென்தாமரைகுளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறையில் இருந்த சபரிவர்மன் கடந்த 13-ஆம் தேதி சிறைக் காவலர்கள் மற்றும் சகக் கைதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். மாற்றுத்திறனாளி ஒருவர் சிறை வளாகத்திற்குள்ளேயே அடித்துக் கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் தொடர்புடைய சிறை வார்டன் ஜெகன், தலைமை வார்டன் சுரேஷ், காவலர் சிவகுமார் ஆகிய 3 சிறை அதிகாரிகளும் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட கைதிகள் விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், வெரியபெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 8 பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து, தடவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, சபரிவர்மன் தாக்கப்பட்ட அறை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு முக்கியத் தடயங்களைச் சேகரித்தனர்.

   

இந்நிலையில், வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இந்த விசாரணை தற்போது திடீர் திருப்பமாக சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 சிறை அதிகாரிகள் மற்றும் 8 கைதிகள் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைதிகளைக் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி விசாரணை தொடங்கப்பட்டுள்ளதால், இந்த கொடூரக் கொலைக்கான முழுப் பின்னணியும், தாக்குதலுக்குக் காரணமான கூடுதல் விவரங்களும் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.