கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வியாபாரியான சபரிவர்மன், சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. வீட்டில் பெட்டிக்கடை நடத்தி வந்த இவர், குட்கா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 9-ஆம் தேதி நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், கடந்த 13-ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக அவர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதை ஏற்க மறுத்த குடும்பத்தினர், சபரிவர்மன் லாக்-அப் மரணம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி உடலை வாங்க மறுத்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விவகாரத்தில் சபரிவர்மனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலில் 19 இடங்களில் கடுமையான காயங்கள் இருப்பதும், குறிப்பாகத் தலை, கழுத்து, கைகள் மற்றும் நெஞ்சுப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதும் அதில் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாகர்கோவில் சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவகுமார், திருவிடைநம்பி ஆகிய 3 சிறைத்துறையினரும், சிறையில் இருந்த கைதிகள் 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க, நேற்று இரவு தமிழக அமைச்சர்கள் ராஜேஷ்குமார் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் சபரிவர்மனின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, அரசு வேலை மற்றும் நிவாரண உதவியை வழங்குவதாகவும், உடலைப் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால், “எங்களுக்கு அரசு வேலையோ, நிவாரணமோ இப்போது வேண்டாம்; சபரிவர்மனின் பிரேத பரிசோதனை வீடியோ பதிவை எங்களிடம் வழங்க வேண்டும். அதை எங்களது மருத்துவரிடம் காட்டி சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்ட பிறகே உடலைப் பெறுவோம்” என குடும்பத்தினர் திட்டவட்டமாக மறுத்துவிட்டதால், அமைச்சர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
