“100 தொண்டர்கள் சொன்ன ஒரே வார்த்தை…. 6 கோடி ரூபாய் காலி?”…. CM விஜய்யின் புதிய போட்டோ பின்னணியில் நடந்த பரபரப்பு….!

By Nanthini on ஐப்பசி 4, 2026

Spread the love

அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் விஜய்யின் அதிகாரப்பூர்வ புகைப்படத்தை மாற்றி புதிய புகைப்படத்தைப் பொருத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாக அலுவலகங்கள் என மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் புதிய படத்தை மாட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், காவல் நிலையங்கள், அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்களிலும் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது வெளியிடப்பட்ட முந்தைய அரசுப் புகைப்படத்தில் அவருடைய சிரிப்பு இயல்பாக இல்லை என்று அவரது ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களும் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தனர். பழைய புகைப்படத்தில் உள்ள செயற்கையான தோற்றத்தைக் சுட்டிக்காட்டி, தெளிவான மற்றும் இயல்பான தோற்றத்துடன் கூடிய புதிய புகைப்படத்தை வெளியிட வேண்டும் எனத் தொண்டர்கள் விடுத்த தொடர் கோரிக்கையின் காரணமாகவே தற்போது இந்த புதிய புகைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

   

இருப்பினும், மாநிலம் முழுவதிலும் உள்ள ஆயிரக்கணக்கான அரசு அலுவலகங்கள், நூலகங்கள் மற்றும் சார்பதிவாளர் அலுவலகங்களில் பழைய படங்களை அகற்றிவிட்டு புதிய படங்களை மாட்டுவதற்கு சுமார் ரூ.6 கோடி வரை செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. புதிய ஆட்சி அமைந்து 5 மாதங்களே நிறைவடைந்துள்ள நிலையில், வெறும் புகைப்பட மாற்றத்திற்காக மட்டும் இவ்வளவு பெரிய தொகையை அரசு விரயம் செய்வதாக பல்வேறு அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

   

முதலமைச்சரின் தோற்றத்திற்காக மக்கள் வரிப்பணத்தில் ரூ.6 கோடி வரை செலவழிப்பது தேவையில்லாத ஆடம்பரம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே புகைப்பட மாற்றத்திற்காகப் பல கோடிகளைச் செலவிடும் “காஸ்ட்லி முதலமைச்சர்” விஜய் என ஒருதரப்பினர் விமர்சித்து வரும் நிலையில், அரசு நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வத் தோற்றத்தை முறைப்படுத்துவது இயல்பான ஒன்று என அவரது ஆதரவாளர்கள் நியாயப்படுத்தி வருகின்றனர்.