தமிழக அரசியல் களம் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தடுத்த நகர்வுகளை உற்றுநோக்கி வரும் வேளையில், முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கரை கட்சியில் சேர்ப்பது தொடர்பாக தவெகவிற்குள் இருவேறு கருத்துக்கள் நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பதால், அவரை கட்சியில் இணைத்தால் “ஊழல்வாதிகளின் புகலிடமாக தவெக மாறுகிறது” என்ற கடுமையான விமர்சனங்களும், பொதுமக்களிடையே எதிர்மறையான பிம்பமும் உருவாகக்கூடும் என கட்சியின் முக்கிய ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், புதுக்கோட்டை மாவட்டத்தில் சி.விஜயபாஸ்கருக்கு இருக்கும் பலமான செல்வாக்கையும் தனிப்பட்ட வாக்கு வங்கியையும் தவெகவிற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கட்சியின் மற்றொரு தரப்பினர் அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்களிடம் தீவிரமாக வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது; இதனால், இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பதில் தவெக தலைமை பெரும் அரசியல் கணக்குகளைப் போட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
