NEWS
7 மாட்டு வண்டியில் 200 தாம்பூல தட்டுடன் வந்து.. தங்கை மகளுக்கு சீர் செய்து.. ஒட்டுமொத்த ஊரையும் வியக்க வைத்த தாய் மாமன்..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் சென்டே மேளதாளத்துடன் தங்கை மகளுக்கு தாய்மாமன் கொண்டு வந்த சீர்வரிசை பொருள்கள் உறவினர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் பிருந்தா தம்பதியினர். இவர்களுடைய மகள் திவிஷா பூ பெய்தியதை தொடர்ந்து பட்டினம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உறவினர்களை அழைத்து மஞ்சள் நீராட்டு விழா நடத்தினர்.
இதில் பிருந்தாவின் அண்ணனும் திவிஷாவின் தாய் மாமனும் ஆன மகேஸ்வரன் சீர்வரிசை வழங்கும் முறை உள்ள நிலையில் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி தடபுடலாக சீர்வரிசைக்கு ஏற்பாடு செய்தார். ஏழு மாட்டு வண்டிகளில் 200க்கும் மேற்பட்ட தாம்பூல தட்டுகளில் வாழைப்பழம், அண்ணாச்சி, ஆப்பிள், இனிப்பு மற்றும் காரம் என ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு பொருள்களை வைத்து கொண்டுவரப்பட்டன.
மேலும் பட்டு பாவாடை, 6 பவுன் தங்க நகை, இரண்டு காங்கேயம் நாட்டு மாடு மற்றும் இரண்டு ஆட்டுக்கிடா என அனைத்தையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு கேரளா செண்டை மேளத்துடன் தடபுடல் ஏற்பாடுகள் ஊர்வலமாக வந்து ஒட்டுமொத்த ஊர் மக்கள் மற்றும் உறவினர்களை வியக்க வைத்தனர். தங்கை மகளுக்கு தமிழரின் பாரம்பரிய முறைப்படி சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய தாய் மாமன் மற்றும் சீர்வரிசை பொருள்களை கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் மண்டபத்திற்கு வந்து வேடிக்கை பார்த்தனர்.