கார்கேவின் பதவிக் காலத்திற்குப் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசியத் தலைவராக பிரியங்கா காந்தியை நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் கட்சிக்குள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன. பிரதமர் இல்லத்திற்கு முன்பாக நடைபெற்ற நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் அவரது துணிச்சலான செயல்பாடே மூத்த தலைவர்களின் இந்த ஆதரவுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
அதேவேளையில், கடந்த 2019 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தியையே மீண்டும் அரியணையில் அமர்த்த சோனியா காந்தி விருப்பம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் பிரியங்காவுக்கு எழும் ஆதரவும், ராகுலை மீண்டும் தலைவராக்க நடக்கும் முயற்சிகளும் காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட தலைமைப் போராட்டத்தில் ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
