தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தமிழக வெற்றிக் கழக (தவெக) கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர், தங்களுக்கு எவ்வித அரசுப் பொறுப்புகளும் இல்லாத நிலையிலும் தாம்பரம் மற்றும் தென்காசியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ‘அம்மா’ உணவகங்களில் தன்னிச்சையாக நுழைந்து ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களின் இந்தச் செயல் தற்பொழுது அரசியல் வட்டாரத்திலும் பொதுவெளியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தைக் கண்டித்து தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த், கட்சி நிர்வாகிகளுக்குக் கடுமையான எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் எவரும் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடவோ, தன்னிச்சையாக ஆய்வுகள் நடத்தவோ கூடாது என்றும், தங்களின் எல்லை என்ன என்பதை அறிந்து தவெகவினர் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். மேலும், கட்சியின் பதவிகளைப் பயன்படுத்தி எவரும் தன்னிச்சையான அதிகார மையங்களாக மாறக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் தங்களைக் கூர்ந்து கவனித்து வருவதால், முதலமைச்சர் விஜய்யின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாத வகையில் நடந்துகொள்வது அனைவரின் கடமை எனச் சுட்டிக்காட்டியுள்ளார். தலைவரின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் யார் செயல்பட்டாலும், அவர்கள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளார். எளிய பின்னணியைக் கொண்டவர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள இந்தச் சூழலில், தொண்டர்களின் ஒழுக்கமே தவெக அரசின் நீண்டகால வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்பதால், நிர்வாகிகள் அனைவரும் அரசு நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி மக்கள் நலத்திட்டங்கள் அடிமட்ட மக்களைச் சென்றடைய உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
