சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மீது, தனியார் செய்தி சேனல் செய்தி வாசிப்பாளர் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். வேலை வாய்ப்பு நிமித்தமாகத் தொடங்கிய பழக்கத்தில், தன்னை வீட்டுக்கு வரவழைத்து அநாகரிகமாக நடந்துகொண்டதாகவும், பின்னர் மன்னிப்பு கேட்பதாகக் கூறி அலுவலகத்திற்கு வரவழைத்து அறையில் 3 மணி நேரம் பூட்டி வைத்து பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில், ஐஸ் ஹவுஸ் காவல் துறையினர் பி.ஆர்.சுந்தர் மற்றும் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் அவரது மனைவி மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், தலைமறைவாக இருந்த தொழிலதிபர் பி.ஆர்.சுந்தரை தற்போது பெங்களூருவில் வைத்து கைது செய்துள்ளனர். இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பி.ஆர்.சுந்தர், “உள்நோக்கம் கொண்ட புகார்களுக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் நான் பலியாகிவிட்டேன்; காலம் தான் அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வரும்” என்று குறிப்பிட்டுள்ளார். தொழிலதிபர் ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
